காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் பிரகடனத்தை இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் – சம்பிக

மொழியால் பிரிவினைவாதம் ஏற்பட்டதைப் போன்று மதத்தால் ஏற்பட்டுள்ள பிரிவினை வாதத்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதனை நாமும் முன்னுதாரணமாக கொண்டு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்குள் வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாணந்துரையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ‘ தேசிய வழி ‘ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது :

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதனை நாமும் ஒரே நாடு; ஒரே நீதி என்ற அடிப்படையில் செயற்படுவதற்கான உதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது நாட்டில் சிங்கள , முஸ்லிம் மக்களிடையே பயமும் சந்தேகமும் காணப்படுகின்றது. இவர்களிடம் மாத்திரமல்ல. கிழக்கில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்கள் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்கள் மத்தியில் இன்றும் நம்பிக்கையின்மை காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும். எனவே மனித நேயத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மண்டியிடாத, அதற்கு எதிராக போராடக் கூடிய மக்கள் சக்தி உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!