நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரேலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருகிறது.

இந்தநிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நளினி வெளியே வந்தார்.

மகளின் திருமண வேலைகளை அவர் கவனித்து வரும் நிலையில் பரோலை இன்னும் ஒரு மாதம் நீட்டித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று அவருக்கு பரோலை 3 வாரங்கள் கூடுதலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!