தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – பீரிஸ்

இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா குடியுரிமை கொண்டவராக, கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்.

அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டியது கட்டாயமில்லை. அதனை அமெரிக்க தூதரகமே உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா குடிமகனாக, கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கோத்தாபய ராஜபக்ச மகிழ்ச்சியாக இல்லை.

அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதும், 21/4 தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணைகளை நடத்துவார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!