கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு – 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

மெக்சிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 23 பேர் உடல் கருகி பலியாகினர். மெக்சினோவின் தெற்கு பகுதியில் உள்ள கோட்ஸாகோல்காஸ் (Coatzacoalcos) நகரில் இரவு நேரக் கேளிக்கை விடுதி வழக்கம்போல் செயல்பட்டு வந்தது. அந்நாட்டு நேரப்படி செவ்வாய் அன்று இரவு திடீரென ஒரு கும்பல் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றது. இதில் விடுதி தீப்பிடித்து எரிந்ததில் 8 பெண்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

மேலும் தீக்காயமடைந்த 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த மாதத் தொடக்கத்தில் மெக்சிகோவின் மேற்கத்திய நகரான உருவாபனில் (Uruapan) இதேபோன்ற தாக்குதல் நடந்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்த இச்சம்பவம், மெக்சிகோவில் 2006-2012 காலகட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே அவ்வப்போது நடந்த போரை நினைவூட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிகளும் பலியாகினர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெராக்ரூஸ் ஆளுநர் குய்ட்லாஹ்வாக் கார்சியா (Cuitlahuac Garcia), போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையேயான மோதலாக இருக்கக் கூடும் எனக் கூறியதோடு, அவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என எச்சரித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!