பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்

பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, உச்சநீதிமன்றம் இது தொடர்பான வியாக்கியானத்தை அளித்துள்ளது.

மாகாணசபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், தேர்தல்களை நடத்துவதற்காக, எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதனால் பழைய முறையில் தேர்தலுக்கு உத்தரவிடும் வாய்ப்பு உள்ளதா என, உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு கடந்த மாதம் 23 ஆம் நாள், அமர்வு ஒன்றை நடத்தி விசாரித்து, பல்வேறு தரப்புகளினதும் கருத்துக்களை கேட்டது.

இதையடுத்து, தமது முடிவை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியிருந்தது.

அந்த விளக்கத்திலேயே, பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும், அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!