அமேசான் காட்டில் மேலும் 2000 இடங்களில் தீ பரவியது

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் மழைக்காடு தென் அமெரிக்க கண்டத்தில் 55 லட்சம் கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இது பிரேசில், பெரு, கொலம் பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது.

இதில் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் நாட்டில் உள்ளன. இங்கு மட்டும் 58.4 சதவீதம் அமேசான் காடுகள் அமைந்துள்ளன. இவை தவிர பெருவில் 12.8 சதவீதமும், பொலிவியாவில் 7.7 சதவீதமும், கொலம்பியாவில் 7.1 சதவீதமும், வெனிசுலாவில் 6.1 சதவீதமும், கயானாவில் 3.1 சதவீதமும், சுரினாவில் 2.5 சதவீதமும், பிரெஞ்ச் கயானாவில் 1.4 சதவீதமும், ஈகுவடாரில் 1 சதவீதமும் இக்காடுகள் உள்ளன.

இங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், அனகோண்டா பாம்புகள் பெருமளவில் வாழ்கின்றன. உலக அளவில் 20 சதவீதம் மழையை இக்காடுகள் வழங்கி வருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அமேசான் காட்டில் கடந்த 8 மாதத்துக்கும் மேலாக காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. இந்த தீ பிரேசில் நாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் பற்றி எரிகிறது.

இதுவரை மொத்தம் 88,816 இடங்களில் தீப்பிடித்துள்ளது. அவற்றை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அமேசான் காட்டில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க 21 கோடி அமெரிக்க டாலர் அதாவது ரூ.144 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. முதலில் அதை ஏற்க மறுத்த பிரேசில் அதிபர் ஜார் போல்சோனரோ, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தன்னை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டால அந்த பணத்தை பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதற்கிடையே பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் காட்டில் தீ பரவுவதற்கு விவசாயிகள் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. விலை நிலம் மற்றும் மேய்ச்சல் நிலத்துக்காக காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, காடுகளுக்கு தீவைக்க தடை விதித்து பிரேசிலில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் மேலும் 2 இடங்களில் தீ பரவியுள்ளது உலக நாடுகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!