சமையல் செய்து சாப்பிட்டு விட்டு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல்

தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் 50 பவுன் நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக் (வயது 50). வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர். வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை பாரூக்கின் வீட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது குறித்து பாரூக்கிற்கு தகவல் கொடுத்தனர். பாரூக்கின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்ட அதிலிருந்து 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடுபோனது தெரியவந்தது.

மேலும் சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!