அயர்லாந்தில் உயிரிழந்த கர்ப்பிணி மகள்: – பெற்றோரின் உருக்கமான கோரிக்கை

அயர்லாந்து வாக்காளர்கள் கருக்கலைப்பின் மீதான தடையை அகற்றுவது குறித்த வாக்களிப்பின்போது, கருச்சிதைவு மறுக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இந்திய மருத்துவரான சவீதாவை மறக்கவேண்டாம் என அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு பல் மருத்துவரான 30 வயது சவீதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டபோது, கருவிலிருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு இருப்பதாகக் கூறி கருக்கலைப்பு செய்ய அயர்லாந்து மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் சவீதாவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பின் மீதான தடையை அகற்றுவதா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கருக்கலைப்பின் மீதான தடையால் பரிதாபமாக உயிரிழந்த சவீதாவை மனதில் வைத்துக்கொண்டு வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு சவீதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12 வார கர்ப்பம் வரையும், பிரச்சினைக்குரிய கர்ப்பமானால் 24 வார கர்ப்பம் வரையும் கருக்கலைப்பு செய்யலாம் என கருக்கலைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்ய வரும் வெள்ளியன்று அயர்லாந்து வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிப்பில் தாயின் உயிரும் கருவிலிருக்கும் குழந்தையின் உயிரும் சட்டத்தின்பார்வையில் சமம் என்று கூறும் அயர்லாந்து அரசியல் சாசனத்தின் எட்டாவது சட்ட திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டுமா என்னும் கேள்வி கேட்கப்பட்டிருக்கும். பல வாக்காளர்கள் இன்னும் என்ன பதிலளிப்பது என முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ள நிலையிலும், சமீபத்திய கருத்துக்கணிப்புகள் ஆம் என பதிலளிக்கும் வாக்காளர்களே முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!