சாட்சியமளிக்க சிறிலங்கா அதிபர் இணக்கம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான, ஆனந்த குமாரசிறி இந்த தகவலை வெளியிட்டார்.

“அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, சிறிலங்கா அதிபர் எப்போது தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

சிறிலங்கா அதிபர் எங்களைச் சந்தித்து, பேசுவதற்கு இணங்கியுள்ளார். எனினும், எப்போது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

சிறிலங்கா அதிபர் செயலகத்துக்குச் சென்று அந்த சந்திப்பை நடத்துவோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வரலாற்றில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஒருவர் சாட்சியமளிப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.

முன்னதாக, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கடுமையாக விமர்சித்திருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழு முன்பாக தாம் ஒருபோதும் சாட்சியமளிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!