போர்க்குற்ற விசாரணையை நடத்துவது அவசியம் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் தளபதியாகப் பணியாற்றியவரும், தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.

“போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு பங்களிப்பு குறித்து தீர்மானிக்கும் உரிமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்பாக அளித்த உறுதிப்பாட்டின் மீது, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த தீர்மானம் குறித்த முரண்பாடுகளை தீர்ப்பதுடன், சிறுபான்மை தமிழ்மக்களை வென்றெடுப்பது மற்றும் அவர்களுக்கு நீதி வழங்குவது பற்றிய கேள்விக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.

காணாமல்போனாருக்கான பணியகம் அமைக்கப்பட்டது உள்ளிட்ட சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் அது பின்பற்றப்படுவதாக நான் நினைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

நீடித்த சமாதானத்துக்கு நிலைமாறுகால மற்றும் நல்லிணக்கம் முக்கியமான அம்சமாகும், ஆனால் அதனை அரசாங்கம் தீவிரமாக பின்பற்றுவதை காணமுடியவில்லை.

சில மேற்கு நாடுகள் இதேபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன, அவை 2011 இல் இருந்து, கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை.

இன்னமும் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. 2015 ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தால் விசாரணை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலில் இரண்டு ஆண்டுகளும், பின்னர், இரண்டு ஆண்டு கால நீட்டிப்பும் கிடைத்தது.

இந்த விசாரணையின் மூலம், உண்மையில் மனித உரிமைகளை மீறியவர்களை நீதிக்கு முன்பாக கொண்டு வருவது, அனைத்துலக சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், சிறிலங்காவுக்கு நல்லது.

புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது மாத்திரமன்றி, புதிய அரசாங்கத்தின் கீழ் எல்லா போர்க்குற்ற விவகாரங்களும் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியைப் பெறுவதற்கு ஒரு முழு அளவிலான செயல்முறை உள்ளது. இது முதலில் தொடங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, அந்த செயல்முறை தீவிரமாகவும், நேர்மையுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

தீவிரவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுக்க நல்லிணக்கம் அவசியமானது. ஆனால் சிறிலங்காவில் நல்லிணக்க செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பம் இல்லாததே அதற்குக் காரணம்.

போர்க்குணத்தின் மீள்எழுச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்திலிருந்து விடுபட 30 ஆண்டுகள் ஆனது. இப்போது சிறிலங்கா, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்னும் 30 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அர்ப்பணிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!