உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த 95 வீதமானோருக்கு நஷ்டஈடு – கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 95 வீதமானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுநாள் பாராளுமன்ற விவாதம் நடத்தத் தயார் எனவும் சபை முதல்வரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தயாசிறி ஜயசேகர எம்பி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் 264 பேருக்கு ஐந்து இலட்சம் ரூபாவீதம் நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகக் கூறப்பட்டது.

எனினும், 22 பேருக்கு மாத்திரமே 5 இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவீதம் நஷ்டஈடு வழங்க நூற்றுக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இருந்தபோதும் ஆறோ ஏழு பேருக்கு மாத்திரமே நஷ்டஈடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அடிக்கடி கூறி வருகின்றார். மக்கள் வெறுப்படைந்திருப்பதுடன், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்குமே மக்கள் ஏசுகின்றனர். தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நஷ்ஈடு பெற்றுக் கொடுக்கப்படாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக அரசாங்கம் அல்லது பாராளுமன்றம் தீர்வொன்றை வழங்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு குண்டுவைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் இருக்கின்றனர் எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும்பபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!