தோல்வியில் முடிந்த கோத்தாவின் முயற்சி

சிறப்பு மேல் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

தங்காலையில் டிஏ ராஜபக்ச நினைவுச் சின்னம் அமைப்பதில் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, நாளாந்த விசாரணை ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து நடைபெறும் என்று சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணையில் இருந்து நழுவும் நோக்கில், கோத்தாபய ராஜபக்சவினால், உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டு சரியாக முன்வைக்கப்படவில்லை என்பதை, சிறப்பு மேல் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம், நேற்று அந்த மனுவை நிராகரித்துள்ளது.

இதனால், ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து கோத்தாபய ராஜபக்ச தொடர் விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!