12 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை: – குஷியான மக்கள்

உலகின் சிறந்த கடற்கரை தீவுகளில் `பெர்னாண்டோ டி நோரன்ஹா’ தீவும் ஒன்று. இங்கு, எந்த வசதியும் இல்லாத காரணத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தீவு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பிரேசில் நாட்டில் உள்ள நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவு.

விடுமுறையை இயற்கை அழகோடு செலவிட விரும்புபவர்களுக்கான சிறந்த கடற்கரைத் தீவு. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இத்தீவில் வசித்து வருகின்றனர். இருந்தபோதும், இங்கு உள்ள மருத்துவமனைகளில் மகப்பேற்றுக்கென்று தனியாக ஒரு `வார்டு’ இல்லை. இந்தக் காரணத்தால், குழந்தைகள் பெற்றெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மே 19-ல் தடையை மீறி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதுகுறித்து, செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு, `ஓ க்ளோபோ’ பத்திரிகையில் அக்குழந்தையின் தாயின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், `கருவுற்றது தனக்குத் தெரியவில்லை. அதற்கான அறிகுறியும் தென்படவில்லை. மகப்பேறு மருத்துவமனை இல்லாத நிலையில், குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பது எனக் கவலைக்கு உள்ளானோம். இதையடுத்து, தீவிலிருந்து 227 மையில் தொலைவில் உள்ள நாட்டால் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. எங்கள் வீட்டிலேயே அதிகாலையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்’ என்றார்.

இதையடுத்து, பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவில் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகப் பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!