ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்று பகுதியில் படகுகளில் சுற்றுலா போக்குவரத்து நடப்பது வழக்கம். ஆனால், கோதாவரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடுவதால், கடந்த சில நாட்களாக சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா செல்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் அருகே கண்டி பொச்சம்மா கோவிலை சுற்றிப்பார்த்த பொதுமக்கள் சிலர், அங்கிருந்து படகு மூலம் பப்பிகொண்டலு என்ற சுற்றுலா தலத்துக்கு செல்ல விரும்பினர். படகுதுறையில் நின்ற ஆந்திர சுற்றுலா வளர்ச்சி கழக படகில் ஏறினர். 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 62 பேர் அந்த படகில் பயணம் செய்தனர். அவர்களில் சிலர் மட்டும் உயிர் காக்கும் உடை அணிந்து இருந்தனர். பெரும்பாலானவர்கள், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அப்போது, கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இருப்பினும், அதையும் மீறி படகு இயக்கப்பட்டது. படகில் சென்று கொண்டிருந்தபோது, கச்சுலுரு என்ற இடம் அருகே திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர். படகு கவிழ்ந்த தகவல் அறிந்தவுடன், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மோட்டார் படகில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 17 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆந்திர மாநில அரசு தலைமைச் செயலாளர் எல்.வி.சுப்பிரமணியம், கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டர் முரளிதர் ரெட்டியை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மீட்புப்பணிக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார். அதன்படி, பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. அதன் உதவியால் மீட்புப்பணி துரிதமாக நடந்தது.

தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 60 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்களும், அதே எண்ணிக்கையிலான மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, உள்ளூர் நீச்சல் வீரர்களும் ஆற்றில் விழுந்தவர்களை தேடினர். இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. பலியானவர்களில் படகு டிரைவர்கள் 2 பேரும் அடங்குவர். மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் கலெக்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார். மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மந்திரிகளுக்கு, விபத்து பகுதிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். கோதாவரி ஆற்றுப்பகுதிகளில் படகு சேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறும், போக்குவரத்துக்கு படகுகள் உகந்தவையா என்று ஆய்வு செய்யுமாறும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

மேலும், படகுகளின் உரிமத்தை பரிசோதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். படகு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டதா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டதா? என்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே, விபத்துக்குள்ளான படகு குறித்து முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது, ஆந்திர சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமானது என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால், அது தனியார் படகு என்றும், அதற்கு துறைமுக அதிகாரிகள் உரிமம் அளித்ததாகவும் ஆந்திர மாநில சுற்றுலா மந்திரி அவந்தி சீனிவாஸ் கூறினார். அவரும், பில்லி சுபாஷ் சந்திரபோஸ் என்ற மந்திரியும் சம்பவ பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளை மேற்பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் முரளிதர ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு அட்னன் நயீம் அஸ்மி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர ராவ் ஆகியோரும் சென்றனர்.

பலியானோர் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், தெலுங்கானா மாநில போக்குவரத்து மந்திரி பி.அஜயை விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பிவைத்தார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்து பகுதியில் மீட்புப்பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோதாவரி ஆற்றில் அதே பகுதியில், கடந்த 1964-ம் ஆண்டும் படகு விபத்து நடந்துள்ளது. அதில் 60 பேர் பலியானார்கள். மீண்டும் 2009-ம் ஆண்டு ஒரு படகு கவிழ்ந்தது. அந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!