இந்தியாவில் இருந்து திரும்பும் அகதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்! – சம்பந்தன்

போரினால் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக இருந்து விட்டு, சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கான சகல வசதிகளையும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துரிதமாக வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிபடுத்தக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பக்குமார தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ கடந்த கால யுத்தத்தின் போது உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீள தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்களை மீள அவர்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன் அவர்களின் சொந்தக் காணிகளை துப்புரவு செய்து குடியேறுவதற்கு வன பரிபாலன, வன ஜீவராசிகள் திணைக்களங்கள் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.யுத்தத்தினால் இடம்பெயரும் போது அப்பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆவணங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக அப்பகுதியில் மீள குடியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளை அரச அதிகாரிகள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!