துணைவேந்தர் நீக்கம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த விசாரணையும் இன்றி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, பொறுப்பான அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நேற்றுமுன் தினமும் யாழ். நுண்கலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நேற்று எந்தவித முறையான விசாரணையும் இன்றி திடீரென ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நீக்குவதற்கு முறைமையொன்று இல்லாமல் நாட்டில் இருக்கும் பிரதான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நீக்குவது பாரிய பிரச்சினையாகும்.

அத்துடன் நாட்டில் இன்னும் சில மாதங்களில் பிரதான தேர்தல் ஒன்று இடம்பெற திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு துணைவேந்தர்களை நீக்கி இருப்பது பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுகின்றது. அதனால் இதுதொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!