ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகு விரிவாக்க பணிகளுக்க அனுமதி பெற்றதை எதிர்த்தும், அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் வேறு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியும் பேராசிரியர் பாத்திமா பாபு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதில்‘ ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நான்கு மாதங்களுக்குள் நடத்திட வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் நீதவான் உத்தரவிட்டு வழக்கு ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து பொலிஸார் அளித்த விளக்கத்தில்,

‘ போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. என்று தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் பொலீஸார் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.” என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!