ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற மாட்டேன் ; ரணில் பதிலடி

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி என்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, என்மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதில் கூறிகொண்டிருக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைகுழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க விடயத்தில் பிரதமர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அவர் இன்று விடுத்திருந்த விசேட அறிவித்தலில் இவற்றை பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் அரசியல் அமைப்பு பிரகாரம் உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்தில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் பிரதமர நீதியரசருக்கும் சட்டமா அதிபருக்கு மட்டுமே உள்ளது. இந்த விடயத்தில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று செயற்பட்டதில்லை. அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று செயற்பட்டவர்கள் குறித்து உயர் நீதிமன்ற தீர்மானங்கள் உள்ளன. அந்த நிலைமைக்கு நான் விழவில்லை. தில்ருக் ஷி விக்ரமசிங்கவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நபருக்கோ உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யாரையும் நியமிக்கக்கோரி எந்தவொரு கடிதமும் நான் அனுப்பியதில்லை. அவ்வாறு இருக்கையில் நான் அவ்வாறு கடிதம் அனுப்பியதாக கூறும் காரணிகள் உண்மைக்கு புறம்பானவை. நான் அவற்றை நிராகரிக்கிறேன் எனவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!