அமெரிக்காவில் தமிழில் பேசிய பிரதமர் மோடி!

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாகப் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஒரு வார கால அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக அவர் உலகின் எரிசக்தி தலைநகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில், தனி விமானத்தில் அவர் சென்று இறங்கினார். அங்கு அவருக்கு அமெரிக்க வர்த்தகம், சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ஓல்சன், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்சவர்தன் சிரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

ஹூஸ்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான நலமா மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்திய வம்சாவளியினர் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மோடி உரையாற்றும் போது, நலமா மோடி? என நீங்கள் கேட்டுள்ளீர்கள், இந்தியாவில் எல்லாம் சௌக்கியம் என்று நான் பதில் அளிக்கிறேன் என்றார். இந்தியாவில் எல்லாம் சௌக்கியம் எனத் தமிழ் உள்பட 9 மொழிகளில் பிரதமர் மோடி பேசிய போது அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பல நூற்றாண்டுகளாக நமது நாடு பல மொழிகளின் ஒத்துழைப்புடன் வளர்ச்சி பெற்றது. மொழி மட்டும் அல்ல, மதம் உணவுப் பழக்கம், பருவநிலை போன்றவற்றிலும் இந்தியாவில் பன்முகத்தன்மை நிலவுகிறது. பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!