ஆலயத்தின் புனிதத்தை மதிக்க கோருகிறது பேரவை!

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையர் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோயினால் உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகளை பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்பாடானது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்து ஆலயங்களையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் புனித பிரதேசமாக தமிழர்கள் பராமரித்து பயன்படுத்திவரும் நிலையில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திலேயே வைத்து இறுதிக் கிரியைகளை செய்ய முற்படுவதானது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயற்பாடாகமட்டுமன்றி, அமைதியற்ற சூழலுக்கான வழியேற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஆகவே, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாகவும், மரபுரிமைச் சொத்தாகவும் திகழ்ந்து வரும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயல்பு நிலையை சீர்குலைக்காத வகையில் இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கையாள வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கோரியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!