நிபந்தனையின்றி சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், நிறுத்துவதற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ரணில் விக்ரமசிங்கவை, சஜித் பிரேமதாசவும் ஐதேக தலைவர்கள் சிலரும் சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நவீன் திசநாயக்க, எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன, அதன்படி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஏதாவது முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, முன்நிபந்தனைகள் ஏதும் இல்லை, ஆனால் செயற்குழுவினால் சில உடன்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பதிலளித்தார்.

இன்றைய சந்திப்பை அடுத்து, ரணில் விக்ரமசிங்க அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த முன்மொழிந்துள்ளார். அதற்கு கட்சி அனுமதி அளித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஐதேக செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் இந்த நியமனம் உறுதி செய்யப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!