இளம்பெண்ணுடன் எடுத்த ‘செல்பி’யை காட்டி ரூ.5 லட்சம் கேட்ட முதியவர் கைது

அன்னூர் அருகே இளம்பெண்ணுடன் செல்பி எடுத்து பணம் கேட்டு மிரட்டிய முதியவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. இவரது மகள் அபர்ணா(வயது 26).ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தான் அணிந்து இருந்த நகை தொலைந்து போனதால் வீட்டுக்கு செல்ல பயந்து பஸ் நிறுத்தத்தில் அழுது கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த நஞ்சுண்டன் (58) விவசாயி. அபர்ணாவின் அருகில் வந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி விட்டார். அன்று முதல் அபர்ணாவின் குடும்பத்தினருடன் நஞ்சுண்டனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. நஞ்சுண்டன் அபர்ணாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து அவருடன் தனது செல்போனில் செல்பி எடுத்து கொள்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நஞ்சுண்டன் அபர்ணாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக அவரது பெற்றோரிடம் கூறினார். அதற்கு ரூ. 2 லட்சம் பணம் செலவாகும் என கூறினார். இதனை உண்மை என நம்பி அவரது பெற்றோர் ரூ. 2 லட்சம் பணத்தை கொடுத்தனர். பணத்தை கொடுத்து நீண்ட நாள் ஆகியும் அபர்ணாவுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் நஞ்சுண்டனை தொடர்பு கொண்டு வேலை வாங்கி கொடுங்கள், இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நான் உங்கள் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை எங்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது என கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டினார். மேலும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ. 5 லட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டி உள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுடன் செல்பி எடுத்து பணம் கேட்டு மிரட்டிய விவசாயி நஞ்சுண்டனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!