அன்னத்தின் மர்மம் வேட்புமனுதாக்கலுக்கு முன்னர் வெளியிடப்படும் : டலஸ்

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமையின் பின்னணியையும், செய்துக் கொண்டுள்ள உடன்படிக்கையினையும் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

தமிழ் தலைமைகளின் ஆதரவை பெற்றுக் கொள்ள ஒருபோதும் முறையற்ற உடன்படிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ செய்துக் கொள்ளமாட்டார்.வெற்றியினை இலக்காகக் கொண்டு போலியான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமது தரப்பின் போட்டிக்கும் தற்போது ஒரு உத்வேகம் பிறந்துள்ளது.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சூழல்பாதுகாப்பு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயற்திட்டங்கள் பொதுஜன பெரமுனவினால்உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவுடன் தற்போது அங்கத்தும் வகிக்கும் அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்களையும் ஒன்றினைந்த ‘பொதுஜன ஜனநாயக முன்னணி’ எதிர்வரும் 5ம் திகதி உத்தியோகப்பூர்வமாக தோற்றம் பெறும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கு தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறவும், நாடு அனைத்து துறைகளிலும் பின்னடைவினை எதிர்கொள்ளவும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் முன்னெடுத்த தவறான தீர்மானமும் பிரதான காரணமாகும்.

தவறினை திருத்திக் கொள்ளவும், மக்கள் எதிர்பார்க்கும் மாறுப்பட்ட அரசாங்கத்தை தோற்றுவிக்கவும் தற்போது சுதந்திர கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணியமைத்துக் கொள்வதே அக்கட்சியின் கொள்கைக்கு அமையவான தீர்மானமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!