புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு – த.தே.கூ.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும்.

அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கியேயாகவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். எனவே இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!