சமூக ஊடகங்களில் பிரபலமான பெண் ஆணவக்கொலை – சகோதரரிற்கு ஆயுள் தண்டனை விதித்தது பாக்கிஸ்தான் நீதிமன்றம்

பாக்கிஸ்தானின் பிரபல பெண் சமூகஊடக பிரபலத்தை ஆணவக்கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் அவரின் சகோதரரிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பாக்கிஸ்தானின் சமூக ஊடக பிரபலமான குவாண்டீல் பலூச் எனஅழைக்கப்படும் பவுசியா அசீமை 2006 ம் ஆண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக அவரது சகோதரர் வசீம் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்தே நீதிமன்றம் அவரிற்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

சமூகஊடகங்களில் தோன்றியதன் மூலம் தனது சகோதரி தனது குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடங்களில் சகோதரி பதிவு செய்த படங்கள் காரணமாக தான் சீற்றமடைந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மார்க்க அறிஞர் ஒருவர் உட்பட ஆறு பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மார்க்க அறிஞரே இந்த கொலையை தூண்டினார் என குவாண்டிலின் குடும்பத்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டதற்காக அவர் விமர்சனங்களிற்கு உள்ளாகியிருந்தார்.

எனினும் அவர் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.

இதேவேளை இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீடு செய்யப்போவதாக வசீமின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

குவான்டீல் பலூச் பாக்கிஸ்தானின் முதலாவது பெண் சமூக ஊடக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தானின் பழமைவாத கட்டுப்பாடுகளை மீறி அவர் சமூக ஊடகங்களில் தனது படங்களை வெளியிட்டு வந்ததுடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும்வெளியிட்டு வநதார்.

பலூச்சின் கொலை சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் பாக்கிஸ்தான் ஆணவக்கொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்திருந்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!