ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார்

வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் (National People’s Movement (NPM) சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு நாளை பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க களமிறக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தமது வேட்பாளர் யார் என்பதை வெளியிட தேசிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது, அவரே எமது தெரிவாக இருக்கக் கூடும் என்று அந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளை நடைபெறும் கூட்டத்தில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!