உடைமாற்றும் அறையில் இரகசியமாக பதிவு செய்தார் வைத்தியர்- மனவேதனையில் பெண் தற்கொலை- தென்கொரியாவில் அதிகரிக்கும் குற்றம்

மருத்துவமனையின் உடைமாற்றும் அறையில் வைத்தியர் ஒருவர் தன்னை வீடியோ எடுத்ததை அறிந்த தென்கொரிய பெண்ணொருவர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தென்கொரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அந்த பெண் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள தென்கொரிய ஊடகங்கள் அவரது பெயரை வெளியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளன.

மருத்துவமனையில் உள்ள உடைமாற்றும் அறையில் தன்னை வைத்தியர் இரகசியமாக வீடியோவில் பதிவு செய்ததை அறிந்த பின்னர் அந்த பெண் கடும் மன உளைச்சலில் காணப்பட்டார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் மிகவும் பாரதூரமானமுடிவை தெரிவு செய்தார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவமனையை சேர்ந்த வைத்தியர் ஒருவரை பெண் ஊழியர்கள் உடைமாற்றும்போது வீடியோவில் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் ஏற்கனவே கைதுசெய்தள்ளனர்.

இந்நிலையில் இந்த மரணத்திற்கும் வைத்தியருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெண்கள் இவ்வாறான இரகசியமான முறையில் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இணையத்தளங்களில் அந்த படங்கள் பதிவு செய்யப்படுவது தென்கொரியாவில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

2017 இல் இவ்வாறான 6400 சம்பவங்கள்குறித்து காவல்துறையினரிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்கொரியாவின் பத்து நகரங்களின் முப்பது ஹோட்டல்களில் 1600 பேரை இரகசியமாக வீடியோ படம் எடுத்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வகை குற்றங்களால் பெண்கள் அதிகளவு அச்சமடைந்துள்ளனர் என தென்கொரிய பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கமராக்கள் எங்கும் இருக்கின்றன , கழிவறைகள் முதல் பாடசாலைகள் வரை உள்ளன,என தெரிவித்துள்ள அவர் உங்களிற்கு தெரியாமல் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!