தஞ்சை அருகே இறுதி சடங்கில் குழந்தை உயிருடன் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி

தஞ்சை அருகே இறுதி சடங்கில் குழந்தை உயிருடன் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் கொண்டு வந்தபோது பலியான சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு கெவின் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் குழந்தை கெவினுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் இன்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தையை சவப்பெட்டியில் எடுத்து வைத்த போது, உடல் அசைந்ததாக தெரிகிறது. இதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தை கெவினை தூக்கிக்கொண்டு மீண்டும் ராசா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம், குழந்தைக்கு உயிர் உள்ளது. தேவையான சிகிச்சையை அளியுங்கள் என்று கண்ணீர் மல்க கூறினர். இதையடுத்து டாக்டர்கள், மீண்டும் குழந்தையை பரிசோதித்தனர். அப்போது சில நிமிடங்களுக்கு முன்புதான் குழந்தை இறந்து இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திடீரென அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அங்குள்ள குழந்தைகள் வார்டு முன்பு சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி குழந்தை கெவின் பெற்றோர் பாஸ்கரன் -பிரித்தி ஆகியோர் கூறியதாவது:-

நாங்கள் குழந்தையை முதலில் சிகிச்சைக்கு அழைத்து வந்த போது டாக்டர்கள் சரியாக பரிசோதனை செய்யாமல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை நம்பி நாங்களும் இறுதி சடங்கு செய்த போது குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிய வந்தது.

இதனால் சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையை டாக்டர்களிடம் காண்பித்தோம். டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து சற்று நேரத்துக்கு முன்பு தான் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை முதலிலேயே குழந்தையை நன்றாக கவனித்து சிகிச்சை அளித்து இருந்தால் எங்களது குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். டாக்டர்களின் மெத்தனப் போக்கால் எங்களது குழந்தையை இழந்து தவிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!