லலிதா நகைக்கடையில் ஹாலிவுட் கொள்ளையர்கள் கைவரிசை!

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், புதுக்கோட்டையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் வட மாநில கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏடிஎம்களில் கொள்ளை, வீட்டில் புகுந்து கொள்ளை, நகைக் கடை மற்றும் வங்கிகளில் துளையிட்டு கொள்ளை என அடுத்தடுத்து அரங்கேறிவரும் கொள்ளைச் சம்பவங்களே அதற்கு சாட்சி..! அந்தவகையில் டார்க் நைட் என்ற ஹாலிவுட் பட பாணியில் முகத்தில் ஜோக்கர் முகமூடி அணிந்தபடி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவற்றில் துளைபோட்டு நுழைந்த வட மாநில கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரியில் காவலாளிகள், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் இந்த கொள்ளை சம்பவம் அறங்கேற்றப்பட்டுள்ளது. கடையின் பின்புறம் ஏசி மெஷின்கள் அமைக்கப்பட்டிருந்த சுவர் வழியாகத் துளையிட்டு உள்ளே புகுந்து தரை தளத்தில் இருந்து ஒட்டு மொத்த தங்க நகையையும் வாரிச்சுருட்டிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தம் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயுள்ளதாக கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காமிராவில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஜோக்கர் போல முகமூடி அணிந்து வந்திருப்பதால் வடமாநில கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான வட மாநிலத்தவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்ற தகவல் கிடைக்க போலீசார் புதுக்கோட்டை விரைந்தனர். அங்குள்ள டைமன்ட் தங்கும் விடுதியில் வட மாநில கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விட்டு டைமண்ட் தங்கும் விடுதியின் 2 வது மாடியில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்த போது வெளியில் இருந்து வந்த அப்துல்லா சேக் என்பவன் காவல்துறையினரை பார்த்ததும் 2 வது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றார். வழக்கம் போல கை,கால்களில் முறிவு ஏற்படாமல் நேரடியாக தலை தரையில் மோதியதால் அப்துல்லா ஷேக்கிற்கு தலையில் மட்டும் வெட்டு விழுந்தது. அவனை மீட்டு தக்க சமயத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததால் உயிர் பிழைத்தான்.

4 பேரில் சபீர் சாக் என்பவனை அழைத்துக் கொண்டு திருச்சி சென்ற காவல்துறையினர் அவனிடம் நகைக்கடை கொள்ளை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கும்பல் ஏற்கனவே நெல்லை அழகர் ஜூவல்லரியில் 37 கிலோ நகையை அள்ளிச்சென்று சிக்கியவர்கள் என்றும் கேரளாவிலும் நகைக்கடைகளில் முகமூடி போட்டு கொள்ளை அடித்து சென்றவர்கள் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர். இந்த வட மாநில கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் தான் தற்போது மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வரும் அப்துல்லா சேக் என்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்த கும்பல் தமிழகத்தில் ஏதாவது வேலை செய்வது போல நுழைந்து ஆட்கள் நடமாட்டம் செல்வ செழிப்பு ஆகியவற்றை கண்காணித்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

வழக்கமாக நகைகடைகளில் விற்பனை நேரம் முடிந்த பின்னர் நகைகள் அனைத்தும் கவுண்டர்களில் இருந்து லாக்கருக்கு எடுத்துசெல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். ஆனால் லலிதா ஜூவல்லரியில் அந்த பாதுகாப்பு பெட்டக வசதி இல்லை என்பதை தெரிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வட மாநில இளைஞர்களைப் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தி அவர்களுடைய முழு விவரத்தையும் பெற்று கண்காணிப்பது காலத்தின் கட்டாயம்..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!