இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) துணை அமைப்பான தேசிய தொலைநிலை மையம் (என்.ஆர்.எஸ்.ஜி.) ஐதராபாத்தில் உள்ளது. இம்மையத்தில் விஞ்ஞானியாக சுரேஷ்குமார் (56) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உள்ளார். வங்கி ஊழியராக பணி புரியும் இந்திரா தனது மகளுடன் சென்னையில் வசிக்கிறார். இதனால் சுரேஷ் குமார் ஐதராபாத்தின் அமீர் பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். திங்கட்கிழமை வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய அவரை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அவர் மழையில் முழுமையாக நனைந்திருந்தார். நேற்று அவர் வேலைக்கு செல்ல வில்லை. இதனால் அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.

இதுகுறித்து வீட்டின் அருகே வசிக்கும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்ற போது சுரேஷ்குமாரின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது பற்றி அவரது மனைவி இந்திராவுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீசில் புகார் செய்தனர். விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அறையில் சுரேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதியில் 3 இடங்களில் காயங்கள் இருந்தது.

இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்குமார் தனியாக இருப்பதை அறிந்து கொள்ளை முயற்சியால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. ஆனால் அவரது வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!