6 இன்ச் இடைவெளியுடன் ஒன்றாக சுற்றுங்கள் – மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை

மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றாக நிற்கும் போதோ, அமர்ந்திருக்கும் போதோ இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என பாகிஸ்தானின் பஹ்ரியா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கராச்சி, லாகூரில் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அந்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் கன்னியமாக இருக்கவே இந்த இடைவெளி அறிவிக்கப்படுள்ளதாக பஹ்ரியா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கையில் அளவுகோல் வைத்துக்கொண்டு சுற்ற முடியுமா? என சிலர் கேட்க, பல்கலை வளாகத்தில் ஆங்காங்கே அளவீட்டு கருவிகள் வைக்க வேண்டும் என சிலர் நக்கலாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!