கோத்தா வென்றாலும் ரணில் தான் பிரதமர்

அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”ஐதேகவுக்கு இப்போது எந்த தலைமைத்துவப் பிரச்சினையும் எழவில்லை.

கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து ஆண்டுகளுக்கு – 2024 வரை, தலைவர் பதவியில் இருப்பார்.

இது தொடர்பாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அதிபர் வேட்பாளர் தொடர்பான விவகாரத்தை ஐதேக எவ்வாறு சுமுகமான முறையில் தீர்த்ததோ அதே வழியில் தீர்ப்போம்.

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றாலும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார்.

ஏனென்றால், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கொண்டவரே, பிரதமராக இருக்க முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தற்போதைய நாடாளுமன்றத்தை, நான்கரை ஆண்டுகள் பூர்த்தி செய்யும் வரை கலைக்க முடியாது. இந்த நாடாளுமன்றம், 2020 பெப்ரவரி 17ஆம் நாளே, நான்கரை ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!