அதிபர் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுத் தாக்கல்

SRI LANKA-POLITICS-ELECTION
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று காலை 9 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகி், 11 மணியளவில் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே, 35 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக மகிந்த தேசப்பிரிய கூறினார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். அவர்களில் 35 பேரே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக்ச, அனுரகுமார திசநாயக்க, எம்.கே.சிவாஜிலிங்கம், ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிதுங்க ஜெயசூரிய உள்ளிட்டவர்களும் அடங்கியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 18 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சார்பில் 2 வேட்பாளர்களும், சுயேட்சையாக 15 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்ப்பு மனுக்களை தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட காலப்பகுதியில், வேட்பாளர்களுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த எதிர்ப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!