கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய வங்கி கிளை முகாமையாளர் பணி இடைநிறுத்தம்!

தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய, கிளை முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். நினைவேந்தல் தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

வங்கியின் தலைமையகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கிளை முகாமையாளரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். போரில் இறந்த உறவுகளை நினைவு கூருவது அவர்களின் உரிமை என்று முகாமையாளர் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து கிளை பணிமனையில் சுடர் ஏற்றியது தேசத்துக்கு விரோதமானது என்று உயர் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நினைவேந்தலை ஏற்பாடு செய்தனர் என்ற வகையில் கிளை முகாமையாளர் மற்றும் பிரிதொரு உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

வங்கியில் உள்ள ஏனைய பணியாளர்கள் தொடர்பிலும் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!