மக்களே எனக்கு சவால் – கலாநிதி அஜந்த பெரேரா செவ்வி

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான கோத்தாபய, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் எனக்கு சவாலே இல்லை. ஆனால் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி காலவோட்டத்தில் வெவ்வேறு அனுகுமுறைகள் ஊடாக ஆட்சியில் அமர்வதற்கு தந்திரங்களைச்செய்ய முயலும் இம்முத்தரப்பினையும் மக்கள் அடையாளம் காண்பார்களா என்பதே எனக்குள்ள சவாலான விடயமாகவுள்ளது என இலங்கை சோசலிஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கலாநிதி அஜந்த பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- துறைசார் நிபுணராகவும், சூழலியலாளராகவும் செயற்பட்டு வந்த உங்களுக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தமைக்கு காரணம் என்ன?

பதில்:- பிஜியில் கடமையாற்றிய நான் நாடு திரும்பியிருந்த நிலையில் எமது நாட்டின் சூழலியலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருந்தேன். அத்துறையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு கூட அரசியல் நிலைப்பாடுகள் அவசியமாக இருந்ததை என்னால் உணரமுடிந்தது. இவ்வாறான நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த முறைமையையும் மாற்றியமைப்பதற்கு இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் பங்களிப்பைச் செய்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

குறிப்பாக மூன்றாம் தரப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது மிகவும் முக்கியமான விடயமாகவுள்ளதாக நான் உணர்கின்றேன். இந்நிலையில் எங்கிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துவது என்ற கேள்வி என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. அச்சமயத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டது. மாற்றத்தினை ஏற்படுத்துவது அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்றால் ஒதுங்கி நின்று எதனையும் செய்துவிட முடியாது. அரச கட்டமைப்புக்களில் பணியாற்றியுள்ள அனுபவத்தினைக் கொண்டிருக்கும் நான் நேரடியாக தேர்தலில் களமிறங்கியிருக்கின்றேன்.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை தொடர்ந்து இரண்டு தசாப்தகாலத்திற்கு பின்னர் பெண்ணொருவர் என்ற வகையில் நீங்கள் களமிறங்கியுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- பெண்ணொருவர் தேர்தல் களத்தில் இருக்கின்றார் என்பதையும் விட, போர் நிறைவுக்கு வந்த பின்னர் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் காணப்பட்டது. ஆனால் போர் நிறைவுக்கு வந்து ஒருதாசாப்தத்தினை எட்டியுள்ள நிலையிலும் இந்த நாட்டின் மக்கள் வாழ்வாதாரத்தினையே முன்னகர்த்த முடியாத அளவு வறுமையான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் நாற்பது சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டினுள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஆறு இலட்சம் மக்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த நாட்டில் வறுமை சூழ்ந்து பொருளாதார ரீதியில் எதிர்மறையான பாதையில் பயணிப்பதையே வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கட்டுப்பாடுகளற்ற சூழலே உருவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி நாட்டில் ஊழல்மோசடிகள் அதியுச்ச மட்டத்தினை எட்டியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரத்தினை சீர்திருத்த முடியாத நிலைமைகள் எழுந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நாட்டினை நிருவகித்தல் உள்ளிட்ட அனைத்துமே மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறான சூழலில் இந்த நாட்டின் நிலைமைகளை மாற்றுவதே எனது முதலாவது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி:- நீங்கள் துறைசார் நிபுணராக பல்வேறு அரசியல் தரப்பினருடனும் இணைந்து அலோசனைகள், திட்டமிடல்கள் போன்ற பணிகளை முன்னெடுத்திருந்தபோது மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகளை எடுக்கவில்லையா

பதில்:- அரசியல் தரப்புக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தீர்மானங்கள் தமது நலன்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். மேலும் நாட்டில் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருப்பதோடு, வறுமையான சூழல் தொடர்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள். அவ்வாறான சூழல்கள் நீடிக்கின்றபோது தான் இலகுவாக தமது அரசியல் காய்நகர்த்தல்களை செய்ய முடியும் என்றும் கருதுகின்றார்கள்.

குறிப்பாக கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் கொள்கைத்திட்டத்தினை நானே வரைந்திருந்தேன். அதனை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடத்தில் கையளித்துள்ள போதும் அதனைபொருட்டாக கொள்ளாது நகர கழிவுகளை புத்தளம் அருவக்காட்டில் கொண்டு சென்று கொட்டும் செயற்பாட்டினையே முன்னெடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை நீடிக்கின்றது.

நுகர்வோர் அதிகார சபையில் நான் கடமையாற்றியபோது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். ஆனால் தற்போது வியாபாரிகளுக்கு ஆதரவாகவே விலைக்காட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. துறைசார் நிபுணர்களாக நாம் ஆலோசனைகளை வழங்கினாலும், அரசியல் தரப்பினர் தமது கட்சியின் நலன்கள், சிந்தனைப்போக்குகளுக்கு அமைவாகவே தீர்மானங்களை எடுக்கின்றார்கள். மக்களையும் கட்சிமயப்படுத்துகின்றார்கள்.

இதற்காக இனம், மதம், மொழி ஆகிய மூன்றையும் பயன்படுத்துகின்றார்கள். இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை நீக்கி நாட்டில் கட்சி மயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னிறுத்துகின்றார்கள். இதுவே அனைத்துப் பிரச்சினைகளும் நீடிப்பதற்கு அடிப்படையில் காரணமாகின்றது.

கேள்வி:- தற்போதைய ஜனாதிபதி மைத்திரியுடன் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் நீங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியில் அவரின் பங்களிப்பினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- தற்போதைய ஜனாதிபதி சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக நான் செயற்பட்டிருந்தேன். அச்சமயத்தில் பால்மாக்களில் மெலனின் போன்ற இரசாயனப் பதார்த்தங்களின் சதவீதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோது அவற்றுக்கான ஒத்துழைப்புக்களை அமைச்சராக அவர் வழங்கியிருந்தார்.

ஆனால் எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தீர்மானம் எடுக்கவல்ல தலைமைத்துவ பண்புகள், கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக நபர்களின் புறச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தகுதியற்றவர்கள் முக்கியமான அந்தப்பதவியில் அமருவதற்கான துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன.

கேள்வி:- கோத்தாபய, சஜித், அநுரகுமார உள்ளிட்ட பிரதான வேட்பாளர்கள் உங்களுக்கு சவாலாக இருக்கின்றார்கள் என்று எண்ணுகின்றீர்களா?

பதில்:- இவர்கள் மூவரும் மக்களுக்கே சவாலானவர்கள். விடுதலைப்புலிகள் மீளுருவாகி விடுவார்கள், சஹ்ரான் மீண்டும் வந்துவிடுவார். ஆகவே, எனக்கு வாக்களியுங்கள் என்று கோத்தாபய கோருகின்றார். இதுமிகவும் முட்டாள்தனமான கோரிக்கையாகும். இவற்றை நிறைவேற்ற ஜனாதிபதியாக வேண்டிய அவசியமில்லை. தனக்கு வாக்களித்தால் மக்களுக்கு வீடுகளை அமைத்து தருவேன் என்று சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். வலுவான வாழ்க்தை தராதரத்தினை உருவாக்கினால் இந்த நிலைமை ஏற்படாதல்லவா? சஜித்தின் முன்மொழிவும் எந்தவிதமான அடிப்படையற்றதாகவே உள்ளது. அநுரகுமாரவைப் பொறுத்தவரையில் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி ஏதாவது நன்மைகளைப் பெறுவதையே இலக்காக கொண்டிருக்கின்றார்கள்.

சோஷலிசவாதிகள் என்று அவர்கள் கூறினாலும் அதிலிருந்து அவர்கள் விடுபட்டுள்ளார்கள். ஆகவே இந்த மூவரும் தனிப்பட்ட முறையில் எனக்கு சவாலானவர்கள் அல்லர். அவர்கள் கல்வி மட்டத்திலோ அனுபவத்திலோ எனக்கு நிகரானவர்கள் என்றே கருதவில்லை. ஆனால் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி காலவோட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகள் ஊடாக ஆட்சியில் அமர்வதற்கு முயலும் இம்முத்தரப்பினையும் மக்கள் அடையாளம் காண்பார்களா என்பதே சவாலான விடயமாகவுள்ளது.

கேள்வி:- ஆட்சியதிகாரம் கிடைத்தால் வவுனியாவை பிரதான நகராக அறிவிப்பேன் என்று கூறியமைக்கான காரணம் என்ன?

பதில்:- வவுனியாவில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. இக்காலத்தில் விடுதலைப்புலிகளையே நேரில் அழைத்து பொலித்தீன் பாவனையை கைவிடுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கின்றேன். ஆதனைவிடவும் வவுனியாவை கைவிட்டு எம்மால் வடக்கு அபிவிருத்தி பற்றி பேசமுடியாது. கிழக்கு அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது. தெற்கையும் வடக்கையும் இணைக்க முடியாது. அத்துடன் இந்த மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்றார்கள். அதனை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதென்றால் வவுனியாவை தலை நகராக கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!