சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, சிறிலங்கா இராணுவத் தளபதியின் படம் மற்றும் கருத்துக்களுடன், தேர்தல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்தே, தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூறியுள்ளது,

தனது பழைய படம் மற்றும் கருத்துக்கள், தனக்குத் தெரியாமல் தேர்தல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கம் அளித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, இந்த தேர்தலில் எந்த வேட்பாளரையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.

எனவே, கடந்த காலங்களைப் போல, நடுநிலையாக இருப்பதன் மூலம், இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா இராணுவம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஒளிப்படம் மற்றும் அவர் வெளியிட்டிருந்த கருத்து என்பனவற்றை அதிபர் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து, “இந்த நேரத்தில் விளம்பரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க இராணுவம் திட்டமிடவில்லை. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சும் தேர்தல்கள் ஆணைக்குழுவுமே கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!