எமது உரிமையைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை! – முதலமைச்சர் சீற்றம்

எமது மாகாணத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, வட மாகாணசபைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர்,

“வட மாகாணத்தில் நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பானவர்கள். எமக்கு மற்றவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. எமக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்து விட்டு மேலும் அந்த அதிகாரங்களைத் தாங்கள் எடுக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை.

அவர்களின் கருத்துகளுக்கு எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எமது மாகாணத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அன்று பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை ஒழுங்கமைப்பில் நடைபெற்றதா? அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையில் நடைபெற்றதா? என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, நினைவேந்தலில் பல சர்ச்சiயான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், எதிர்வரும் வருடம் 10ஆ​வது வருடம் என்றபடியால், மக்கள் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய வகையில் தற்போதிலிருந்தே, அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

கடந்த நினைவஞ்சலியின் போது பல குறைபாடுகள் இருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வில் அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வங்கிகளுக்கு ஒரு விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளுக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வடமாகாண சபை மற்றும் அதன் மக்கள் தமது மனோநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட சில குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் சில முடிவுகளை முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!