சுமந்திரனுக்கு நந்திக்கடல் பாடம் கற்பிக்க முல்லைத்தீவில் குடியேறுகிறார் ஞானசார தேரர்!

சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டுக்கும் தான் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

” வரலாற்று முக்கியத்துவம் மிக்க பௌத்த புராதன சின்னங்கள் அமைந்துள்ள முல்லைத்தீவில் சென்று குடியேறப் போகிறேன். இங்கு வேறு பிரச்சினை காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் இருக்கின்றது. 455 கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கின்றன. சுமந்திரன் ஒரு கிறிஸ்தவ போதகர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தே செயற்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்து ஆலயம் மீது என்ன அக்கறை?

பிரிவினைவாதத்திற்கு தேவையான விடயங்களை செயற்படுத்திக் கொண்டு,கோட்சூட் அணிந்து கொண்டு, தமிழ் இராச்சியமாக்க வேண்டுமெனக் கூறிக்கொண்டு செயற்படுபவர்களின் பொறிக்குள் நாம் சிக்க வேண்டுமா? அதற்கு கீழ்ப்படிய வேண்டுமா?

தேர்தல் ஒன்று வருகின்றது. அதன் பின்னர் நாம் முல்லைத்தீவில் சென்று குடியேறுவோம். என்ன நடக்குதென பார்ப்போம். ரணில் அரசாங்கம் வந்தாலும், மஹிந்த அரசாங்கம் வந்தாலும் இரண்டும் ஒன்றுதான். இந்த நாடு யாருடையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

“தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக்கவில்லையெனின் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்கள் பின்னோக்கிச் செல்வார்கள் என்பதோடு சிங்கள மக்களும் இதில் தலையிட வேண்டியேற்படும்.

ஆகவே இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அனைத்துத் தரப்பும் தலையீடு செய்ய வேண்டும். சுமந்திரனும், விக்னேஸ்வரனும் தென்பகுதிக்கு வந்து சண்டித்தனம் செய்வதில்லை. வடக்கிலேயே அவர்கள் சண்டித்தனம் காட்டுகின்றார்கள். அவர்களது மனிதாபிமானம் அவ்வளவுதானா? பௌத்த பிக்குவின் இறுதியைக் கிரியையைக் கூட சரியாக நடத்த அவர்கள் இடம்கொடுக்கவில்லை.

சாதாரண தமிழ் மக்களுக்கு இங்கு பிரச்சினையில்லை. அது எமக்குத் தெரியும். இந்து சமூகத்திற்கு நாம் மிகவும் பொறுப்புடன் ஒன்றை கூறுகின்றோம். சுமந்திரன் உள்ளிட்ட அமெரிக்க சார்பு மிகவும் ஆபத்தான நாம் ஒரு விடயத்தை மறக்கக்கூடாது. இஸ்லாமிய பிரிவினைவாத்திற்கு அப்பாற்பட்ட மிகவும் ஆபத்தான கிறிஸ்தவ அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.

கிறிஸ்தவ சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் என பலர் இன்று இருக்கின்றனர். எங்களை இனவாதிகள் என தூற்றுகின்றனர். சுமந்திரன் ஒரு போதகர். அவர் இன்று நாடாளுமன்றில் இருக்கின்றார். போதகர் ஒருவரே எனக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்கின்றார். சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார். அதனையே அவர்கள் கேட்கின்றனர்”என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!