ஓடுபாதையில் வழுக்கி விளக்குகளில் மோதிய சிறிலங்கன் விமானம் – 240 பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்

கடும் மழைக்கு மத்தியில் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிலங்கன் விமான சேவை விமானம், ஓடுபாதையில் வழுக்கிச் சென்று, விபத்துக்குள்ளாகியதில், 240 பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.

கொழும்பில் இருந்து, புறப்பட்டுச் சென்ற UL 167 இலக்க, சிறிலங்கன் விமான சேவை விமானம், நேற்று பிற்பகல் 3.34 மணியளவில் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, காலநிலை மோசமாக இருந்தது.

கடும் காற்றுடன் மழை கொட்டிக் கொண்டிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்கிய போது, ஓடுபாதையின் எல்லை வரை வழுக்கிச் சென்று, அதில் பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞை விளக்குகளில் மோதியது.

இதனால் இரண்டு விளக்குகள் சேதமடைந்தன. விமானத்தின் ஒரு சில்லும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விமானத்துக்கோ, அதில் இருந்த 228 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து விமான ஓடுபாதை மூடப்பட்டு, விமானம் முழுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!