அமெரிக்காவில் ஆழ்துளை கிணறு மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா…!

அமெரிக்காவில் 58 மணி நேரம் போராடி 22 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை மீட்ட சம்பவம், அங்குள்ள பயன்படாத மொத்த ஆழ்துளை கிணறுகளையும் மூட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 1987 ஆம் அண்டு அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது.சம்பவத்தன்று இளம் தாயார் ரீயா செஸ்சி தமது 18 மாத குழந்தையை விளையாடவிட்டு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது தொலைபேசி அழைப்பு வரவே அவர் குடியிருப்புக்குள் சென்றுள்ளார். பேசிவிட்டு வெளியே வந்து குழந்தை ஜெசிகாவை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து ஜெசிகாவின் அழுகை சத்தம் கேட்டது.இதனால் பதட்டம் அடைந்த அவர், குழந்தையை மீட்க பொலிஸாருக்கு உடனே தகவல் கொடுத்தார்.

அதன் பின்னர் அடுத்த சில மணித்துளிகளில் அந்த குழந்தையை மீட்க அமெரிக்க அரசு ஒட்டுமொத்த அரசு துறைகளையும் களம் இறக்கியது.ஜெசிகா விழுந்த ஆழ்துளை கிணறு 22 அடி ஆழமும், 8 அங்குலம் அகலமும் கொண்டது. வெறும் 22 அடி தான் என்றாலும், குழந்தையை மீட்க அவர்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன.தொடர்ந்து ஜெசிகாவை பத்திரமாக மீட்க, அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வழியே மீட்பு குழுவினரை அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டது.

ஆனால் அங்கு பாறை அதிக அளவில் இருந்ததால் தோண்டும் பணி பெரும் சவாலாக இருந்தது. 22 அடியை தோண்டுவதற்கு மட்டும் சுமார் 45 மணி நேரம் ஆனது.அதன்பின் ஜெசிகாவை மீட்பதற்கு மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றனர். அங்கு படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த ஜெசிகாவை அவர்கள் பத்திரமாக மீட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த மீட்பு பணி 58 மணி நேரம் நடந்தது.

மீட்புக்கு பின்னர், ஜெசிகா பல மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.அவருக்கு 15 அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் காப்பாற்றினர். மட்டுமின்றி அறக்கட்டளை ஒன்று, நிதி வசூலும் செய்தது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனதிலும் இடம் பிடித்த ஜெசிகா, அமெரிக்காவின் குழந்தை என்று அழைக்கப்பட்டாள்.

குழந்தை ஜெசிகா மீட்கப்பட்டபோது பதிவான புகைப்படத்திற்கு 1988 ஆம் ஆண்டு மிகவும் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.1989 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ், ஜெசிகாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருது வழங்கி பாராட்டினார்.

தற்போது ஜெசிகாவிற்கு 33 வயது ஆகிறது. ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.ஜெசிகாவின் 25-வயதின்போது, அவருக்கு ஏற்கனவே அறக்கட்டளை வசூலித்த சுமார் ரூ.9 கோடி நிதி வழங்கப்பட்டது.அமெரிக்காவின் இந்த ஒரு சம்பவம் தான், அதற்கு பின் அங்கு ஆழ்துளை கிணற்றில் எந்த குழந்தையும் இதுவரை விழவில்லை.மட்டுமின்றி பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!