பஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூத் மற்றும், அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் ஹசன் அலி ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

ஐக்கிய சமாதான கூட்டணி என்ற பெயரில் இயங்கும், அமைப்பின் தலைவராக பஷீர் சேகு தாவூத்தும், அதன் செயலராக ஹசன் அலியும் இருக்கின்றனர். இந்த அமைப்பின் ஊடாகவே அவர்கள், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்பேசும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த பஷீர் சேகு தாவூத் பின்னர், சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

எனினும், அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதில்லை என பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே பஷீர் சேகு தாவூத் இப்போது கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.