ஓமானை நிர்மூலமாக்கிய ‘மெகுனு’ புயல்

மத்திய கிழக்கு நாடான ஓமான் மற்றும் யேமனில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலினால் உண்டான அடை மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவான மெகுனு புயல், கடந்த சனிக்கிழமை தெற்கு ஓமான் மற்றும் யேமன் நாடுகளை பயங்கரமாகத் தாக்கி நிர்மூலமாக்கியது.

இதனால் அப் பகுதியில் வரலாறு காணாத மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவு அங்கு ஒரே நாளில் பதிவானதால் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின.

அத்துடன் யேமன் சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசியதுடன் அடை மழை பெய்து ஓமானின் சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டது.

இந் நிலையில் ஓமானின் சாலாலாவை நகரை சூறாவளி தாக்கியதுடன் 278.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் ஒரே நாளில் நேற்றைய தினம் அங்கு பதிவானது.

ஓமானை தாக்கிய இந்த புயல் ஏற்படுத்திய அனர்த்தம் காரணமாக இதுவரயைில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் தெற்கு ஓமானில் இதுவரை தாக்கிய புயல்களிலேயே அதிக சக்தி வாய்ந்த புயலாக மெகுனு புயல் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!