சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக தான் கூறவில்லை – தயாசிறி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக தான் கூறவில்லை என்று பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றிரவு ‍கொழும்பு 10 – டாலி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையத்தில் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

மாலை 7.30 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,

இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற கலந்து கொண்ட சு.க உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய இம்மாதம் 16 ஆம் திகதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இம் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் கட்சியின் மத்திய குழு கூடும். அதன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தீர்க்கமாக அறிவிக்கப்படும்.

மேலும் சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், அவர்களுக்கு பதிலாக பதில் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!