இனவாதத்தைப் பரப்பி வாக்குகளை திசை திருப்ப முயற்சி – ரவி கருணாநாயக்க

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு குடும்பத்தை மாத்திரம் ஆட்சி பீடம் ஏற்றுவதா அல்லது நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களும் ஆட்சியாளர்களாக மாறுவதா என்பதை தீர்மானிப்பது உங்களுடைய கைகளிலே உள்ளது என்று அமைச்சர் ரவி கருநாணாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (5) வாழைச்சேனை – செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இனவாதத்தை தோக்கடிப்பதற்காக எதிர்வரும் பதினாறாம் திகதி அன்னப்பறவைக்கு முன்னால் புள்ளடியிட்டு சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

எஞ்சியுள்ள நாட்களில் நாம் அனைவரும் வீடுவீடாகச் சென்று ஒவ்வொருவருடைய மனங்களையும் தொட்டுப் பேசி அத்தனை வாக்குகளையும் நாங்கள் எங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும். இது இலகுவான விடயமல்ல இவர்கள் இனவாதத்தைப் பரப்புகின்றார்கள். வாக்குகளை திசை திருப்புவதற்காக முயற்சி செய்கின்றார்கள். ஆகவே நாங்கள் ஓயாமல் உழைத்து வெற்றி பெற்ற பின்னர்தான் ஓய்வெடுக்க வேண்டும். சுதந்திரக் கட்சியினர் எங்களோடு இனைந்து கொண்டு ஒரு சஜித் அலையினை உருவாக்கியுள்ளார்கள்.

அன்று சர்வாதிகார ஆட்சி எங்களுக்கு வேண்டாம் அதனை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்காக நீங்கள் அளித்த வாக்குப் பலம்தான் இவ்வாறு செய்யத் தோன்றியது.

அவ்வாறு நாங்கள் அந்த மாற்றத்தை செய்தாலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலே எங்களுக்கு முழுமையான பலத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அதனால் ஒரு கூட்டு ஆட்சி உருவானது அதனால் பல குழப்பங்கள் தோன்றின உங்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அது எவ்வாறாக இருந்தாலும் உங்களுக்கு அச்சமின்றி வாழக் கூடிய ஒரு சூழ்நிலையை எங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

ஜனநாயக வழியில் நாங்கள் முன்செல்ல வேண்டும். நாங்கள் ஜனநாயகத்தை மாத்திரமல்ல நாட்டிலே வீழ்ச்சியடைந்து கிடந்த பொருளாதாரத்தையும் சீர்படுத்தியுள்ளோம். 2015 ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் இருந்த வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது.

எங்களுடைய ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, பெற்றோல், மண்ணெண்ணெய், எரிவாய்வு போன்ற பொருட்களுக்கு விலைகளை குறைத்துள்ளோம்.

அவ்வாறு எங்களால் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்து ஒரு மாவட்டத்திற்கு மாத்திரமிருந்த அபிவிருத்தியை நாடு பூராகவும் எங்களால் மேற்கொள்ளக் கிடைத்துள்ளது.

அவர்களுடைய அபிவிருத்தி ஒரு குடும்பத்திக்கு எங்களுடைய அபிவிருத்தி அனைத்து குடும்பங்களுக்கும். நாங்கள் இனவாதத்தை இல்லாமல் செய்கின்றோம் அவர்கள் இனவாதத்தினால் வாழ்கின்றார்கள் நாங்கள் அச்சத்தைப் போக்குகின்றோம். அவர்கள் அச்சத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்கின்றார்கள்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சி இனபேதம் அற்ற கட்சியாக ஆட்சியில் இருந்து வந்திருக்கின்றது.

நாங்கள் கொழும்பில் சொல்வதைத்தான் மட்டக்களப்பிலும் சொல்கின்றோம் யாழ்ப்பாணத்தில் சொல்வதைத்தான் ஹம்பாந்தோட்டையிலும் சொல்கின்றோம். எங்களுடைய எதிர் தரப்பினர் போல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விடயங்களைப் பேசி நாட்டைக் குழப்புகின்ற வேலை எங்களிடம் கிடையாது.

ஆகவே பயப்பட வேண்டாம் நாம் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் பதினாறாம் திகதி சஜித்தை ஜனாதிபதியாக்கி ரணிலை பிரதமராக்கி உங்களுக்கும் எங்களுக்குமான அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!