சாலையில் சண்டையிட்ட மாணவர்கள்: திருக்குறள் எழுத வைத்த காவலர்!

நெல்லை பாளையங்கோட்டையில் சாலையின் நடுவே சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். இது பொதுமக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும், மற்றொரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மாணவர்கள் வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மோதிக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அதே மாணவர்கள் தனியார் பள்ளி அருகாமையில் மீண்டும் மோதி கொண்டனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் அங்குள்ள கண்காணிப்பு மேராவில் பதிவான காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்ததில் இரு பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், மோதலில் ஈடுபட்ட 49 மாணவர்களும் செய்த தவறுக்காக 1330 திருக்குறள்களையும் எழுதிக் காட்டிவிட்டு, பள்ளிக்கு செல்லலாம் என பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் நூதன தண்டனை விதித்தார். இதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி, மாணவர்கள் நவம்பர் 5ஆம் தேதி பகல் 12 மணியில் இருந்து வீடு மற்றும் காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து 1330 குறள்களையும் எழுத தொடங்கினர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 1330 குறள்களையும் முழுமையாக எழுதிவிட்டு, நவம்பர் 6ஆம் தேதி காவல் நிலையத்துக்கு வந்தனர்.

மாணவர்கள் திருக்குறள் எழுதிய காகிதத்தில் காவல் நிலைய முத்திரையைப் பதித்து பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் திருக்குறள்களை முழுமையாக எழுதவில்லை, திருக்குறளை எழுதாமல் பள்ளி செல்ல கூடாது என காவல்துறையினர் கண்டிப்புடன் கூறியதையடுத்து காவல் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து திருக்குறள்களை மாணவர்கள் எழுதினர். இது குறித்து பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் பிபிசி தமிழிடம் கூறுகையில் “பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளி மாணவர்கள் இடையே எந்த பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் என்ற தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சண்டையிட்டு வந்துள்ளனர். இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தன. ஆனால் உரிய ஆதாரங்கள் இல்லாததால் மோதலில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது.”

“கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்கள் பாளையங்கோட்டை நடுச்சாலையில் மோதலில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பொது மக்கள் தகவல் அளித்ததின் அடிப்படையில் அங்கு சென்றோம் காவல்துறையினர் வருவதை கண்டதும் மாணவர்கள் ஓடிவிட்டனர். இருப்பினும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து விசாரனை நடத்தினோம,” என்றார். “விசாரணையில் திருக்குறளில் உள்ள நட்பதிகாரப் பாடல்களை டிக் – டாக்கில் எடிட் செய்து, பகிர்ந்துகொண்டு நட்புக்காக மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நட்பதிகாரத்தில் உள்ள திருக்குறள்களைக் கூறச் சொன்னபோது, திருக்குறளைக் கூற முடியாமல் அனைத்து மாணவர்களும் தவித்தனர். ”

திருக்குறளை தங்கள் விருப்பத்துக்கு டிக் – டாக்யில் எடிட் செய்து, வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவர்களால் நட்பதிகாரத்தில் உள்ள ஒரு குறளை கூட கூற முடியாதது வேதனையை அளித்தது. எனவே மாணவர்களுக்கு திருக்குறள் மீது மரியாதை ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மாணவர்களின் படிப்பு மற்றும் வருங்கால நலன் கருதி மோதலில் ஈடுபட்ட 49 மாணவர்களையும்1330 திருக்குறள்களை எழுதிக் காட்டிவிட்டு, பள்ளிக்குச் செல்ல வேண்டும் என தண்டனை வழங்கியதாக கூறினார் தில்லை நாகராஜன். மேலும், எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல்கள் ஏற்படாமல் இருக்கவும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கையில் சாதிய கயிறுகள் கட்ட கூடாது என்ற விழிப்புணர்வை நெல்லை காவல் துறையினர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமங்களுக்கு சென்று கிராம தலைவர், ஊர் பொதுமக்கள், பெற்றோர்,மாணவர்கள் என அனைவரிடமும் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!