ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் கோத்தாபயவிற்கு14 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொடுக்க முடியும் : திலங்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைபெற்றுக்கொடுக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

இன்னும் சில தினங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆட்சிக்கால கட்டத்தில் நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தையே வழங்கியது.

அதன் பின்னணியிலேயே நாம் இந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

ஏனெனில், வடக்கில் எல்.ரீ.ரீ .ஈ பயங்கரவாத்திற்கு துணை போன தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புபட்ட ரிசாத் பதியுதின் போன்றோர் சஜித் பிரேமதாசவின் பக்கம் உள்ளனர். இந்நிலையில் அவரால் 50 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியாது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மஹிந்த குடும்பத்தினருடனான தனிப்பட்ட கோபதாபங்களுக்காக அவருக்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட பதவிகளை பெற்றுக்கொடுத்த சுதந்திர கட்சியின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாமல் கட்சியில் இருந்து விலகி சென்றுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் மாத்திரம் சுமார் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் .அந்த வகையில் எமது14 இலட்சம் வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக இருக்கும்.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கேட்டிருந்தோம் ஆயினும் அவர் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்களுக்கு வாக்களித்தமையை கருத்தில் கொண்டு அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதனை அடுத்தே நாம் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.

கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைப்பதே எமது நோக்கமாகும் .அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோத்தாபயவின் அரசாங்கத்தில் உயர் பதவியொன்றை வகிப்பார் என எதிர்பார்க்கின்றோம். அதுவே எம்முடைய விருப்பமும் ஆகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சஜித்பிரேமதாச தேர்தலில் தோல்வி அடைவார் என்று தெரியும் .

ஆகவே தான் , எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அதீத ஆர்வம் காட்டுகின்றார். ஏனெனில் அவர் அமெரிக்காவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அதற்காகவே ஜனாதிபதி எவ்வளவோ எடுத்து கூறியும் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஐ.தே.க.வே சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!