பசும்பாலில் தங்கம்: பசுவிற்கு தங்க கடன் கேட்ட பால் வியாபாரி!

மேற்கு வங்காள மாநிலத்தின் பாஜக தலைவர் திலிப் கோஷ். இவர் மெடினிபூர் பாரளுமன்ற தொகுதி எம்.பி.யும் ஆவார். கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பர்த்வான் நகரில் நடைபெற்ற “கோபா அஷ்டமி காரியக்ரம்” என்ற நிகழ்ச்சியில் திலீப் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாடு என்பது எங்களுக்கு தாய் போன்றது. பசுவதையை நாங்கள் ஒரு சமூக விரோத செயலாகவே கருதுகிறோம்.

எங்களது தாயை கொலை செய்வதை எந்த வகையிலும் நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருக்கிறது. அதனால்தான் அது ஒருவித மஞ்சள் நிறத்துடன் இருக்கிறது. வெளிநாட்டு பசுக்களை வளர்க்காதீர்கள் என்றார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் தங்குனி என்ற பகுதியில் இருக்கும் மணப்புரம் நிதி நிறுவனத்திற்கு இரு பசுக்களுடன் சென்று எவ்வளவு தங்க கடன் கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார். இதைக்கேட்டு ஆடி போன அதிகாரிகள் அவரிடம் உண்மையை புரிய வைத்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், ‘பசும்பாலில் தங்கம் உள்ளது என கேள்விப்பட்டேன். ஆகவே தான் எனது இரு பசுக்களுடன் தங்கக் கடன் வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன். எங்கள் குடும்பமே இந்த மாடுகளை நம்பிதான் உள்ளோம். என்னிடம் மொத்தம் 20 மாடுகள் உள்ளன. மாடுகளை வைத்துக் கொண்டு தங்க கடன் கொடுத்தால் எனது வியாபாரத்தை விருத்தியடையச் செய்வேன்’ என்றார்.

இதுகுறித்து கரல்காச்சா பஞ்சாயத்து தலைவர் மனோஜ் சிங் கூறுகையில், பாலில் தங்கம் இருக்கிறது என கூறிய திலீப்பிற்கு நோபல் பரிசுதான் தர வேண்டும். அவர் பாட்டுக்கு கூறிவிட்டு போய்விட்டார். ஆனால் மாடுகளுடன் எனது அலுவலகத்துக்கு தினமும் வரும் மக்கள் இதை வைத்து கடன் கொடுங்கள் என கேட்கிறார்கள். ஒரு அரசியல் தலைவர் இப்படி பேசுவது தவறு என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!