ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னனி என்ன ? – பணப் பரிமாற்றமா ? ராஜபக்ஷவினருக்கான நன்றிக்கடனா? : பிமல்

ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணியின் பண பரிமாற்றலா உள்ளது? அல்லது ராஜபக்ஷவினருக்கு செய்யும் நன்றிக்கடனா? அல்லது அந்த குற்றவாளி ஜனாதிபதியின் உறவினரா? என சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக ஜனாதிபதி செய்த காரியமானது அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது சட்டம் நீதியை மீறும் செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் கூறுகையில்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிறைக் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார். இளம் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரையே இப்பொது ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் நாடாக நாம் பாரிய பின்னடைவை சந்திக்கின்றோம். நாட்டின் சட்ட- நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளமை மட்டும் அல்லாது சர்வதேச ரீதியிலும் நாம் பாரிய அழுத்தங்களை சந்திக்க நேரும்.

ஏனெனில் கொல்லப்பட்ட அந்த பெண் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண் என்பதால் இது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விடயமாகவும் உள்ளது. ஆகவே ஜனாதிபதி முன்னெடுத்த இந்த செயற்பாடு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய அவமானமான செயற்பாடாகும்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையினால் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்த கடிதத்தை வாசித்தால் இதயமே வெடித்து சிதறுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

ஜனாதிபதி ஏன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்தார். விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் ஜனாதிபதியின் உறவினரா? அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு செய்யும் நன்றிக்கடனா? அல்லது வேறு பண பரிமாற்றல்கள் உள்ளனவா? பண பரிமாற்றல் இதில் இடம்பெற்றதாக கதைகள் வெளிவருகின்றது.

பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய பலர் இன்னும் சிறையில் உள்ளனர் அவர்களை விடுத்து ஏன் இவ்வாறான கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார். தூக்கு மேடை கொண்டுவருவதாக கூறும் ஜனாதிபதி இறுதியாக நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விசாரணைகளை நடத்தி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நபரை ஏன் விடுவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஏன் எதிர்ப்பை விடுவிக்கவில்லை. அனுரகுமார திசாநாயக மட்டுமே இது குறித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கேவலப்படுத்தும் வேலையையே நீங்கள் அனைவரும் செய்கிறீர்கள்.

உண்மையில் இது பெண்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு. நீதிமன்றமே குற்றவாளி என அடையாளபடுத்திய ஒரு குற்றவாளியை விடுவிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன. தாரிமீக உரிமை என்ன. சட்டத்தில் என்ன இருந்தாலும் மனிதாபிமாம் இல்லாது கீழ்த்தரமாக ஜனாதிபதி செயற்படுவது மோசமானது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் அஜித் பி.பெரேரா கூறுகையில் :- ஜனாதிபதி மூலமாக கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் போது அரசியல் அமைப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளது. குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சரின் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தே விடுவிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி செய்தது தவறான முன்னுதாரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!