தொடங்கியது யாழ். – சென்னை விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான முதலாவது பயணிகள் விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.

சென்னையில் இருந்து நேற்றுக்காலை 10.35 மணிக்குப் புறப்பட்ட எயர் இந்தியா, அலையன்ஸ் எயர் விமானம், நேற்று மதியம் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர், அந்த விமானம், பிற்பகல் 12.45 மணியளவில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.

முதல் விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் சென்னைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விமான சேவை, திங்கள், புதன், சனி என, வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று விமான சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும், எயர் இந்தியா நிறுவன அதிகாரிகள் சிறியளவிலான விழாக்களை ஒழுங்கு செய்திருந்தனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

அதேவேளை, உள்நாட்டு தனியார் விமான நிறுவனமான பிட்ஸ் எயர் நிறுவனம், அனைத்துலக சேவைகளை நடத்துவதற்கான அனுமதியை சிறிலங்காவின் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வழங்கியுள்ளது.

பிட்ஸ் எயர் நிறுவனம், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான வாடகை விமானங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!