பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி

தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன்.

யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன்.

வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை. நான் யாருடைய நிபந்தனைகளுக்கு இணங்குகின்ற நபர் அல்ல.

சிறிலங்கா செய்து கொண்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும் மீளாய்வு செய்யப்படும்.

சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடிய பின்னர், அவற்றில் மாற்றங்கள் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!